செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (07:36 IST)

திராவிட மண்ணில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை: ஓபிஎஸ்க்கு எதிராக கருத்து கூறிய கேபி முனுசாமி

இது திராவிட மண், இந்த மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது அவரது அரசியல் வருகையை தான் வரவேற்பதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்திருந்தார். அதேபோல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் அவரது கட்சி குறித்த கருத்தை கூறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார் 
இந்த நிலையில் தமிழகம் என்பது திராவிட மண் என்றும், தமிழகத்தில் ரஜினிகாந்த்தால் என்ற மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றும் தமிழகத்தில் ஆன்மீக அரசியலுக்கு இடமில்லை என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அவர்கள் கூறியுள்ளார் 
 
அதிமுக நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றம் எதற்கு? என கேள்வி எழுப்பிய கேபி முனுசாமி,  கம்யூனிஸ்ட் பாமக போன்ற கட்சிகள் எல்லாம் நேர்மையான கட்சி ஆட்சியை விரும்பவில்லையா? ஏதோ ரஜினி ஒருவர்தான் நேர்மையான ஆட்சியை விரும்புவதுபோல் பேசி வருவது வேடிக்கையானது என்று அவர் கூறியுள்ளார்
 
ரஜினிகாந்த் ஒரு சாதாரண நபர் என்றும் பெரியார் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் விதைத்த திராவிடத்தில் அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகை ஆதரித்த நிலையில் ரஜினிக்கு எதிரான கருத்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது