அய்யய்யோ.. அது நான் இல்லை - மறுப்பு தெரிவிக்கும் மனோபாலா
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக, தான் எந்த கருத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்பவில்லை என நடிகர் மனோபாலா கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து, இயக்குனர் மனோபாலா, தனது வாட்ஸ் அப் குரூப்பில், கிண்டலான வாசகத்தை பதிவு செய்ததாக அதிமுக பிரமுகர் ஆலந்தூர் சினி.சரவணன் சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கமிஷனர் அலுவலகம் வந்த மனோபாலா, கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ‘நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நேரங்களில் என்னுடைய செல்போனை வைத்து விட்டு செல்வது வழக்கம். அப்போது யாரே எனக்கு தெரியாமல் என் செல்போனில் அந்த தகவலை பதிவு செய்துவிட்டனர்.
அதிமுகவில் நான் கடந்த 15 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன். மேலும், நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளேன். என் மேல் களங்கம் கற்பிக்கவும், அவதூறு பரப்பவும் யாரோ திட்டமிட்டு இதை செய்துள்ளனர். அவர் யார் எனக் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகார் மனுவை கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் இப்போதும் அதிமுகவின் விசுவாசியாகத்தான் இருக்கிறேன். சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நடிகர் குண்டு கல்யாணம் தலைமையில் போயஸ் கார்டன் சென்று அவருக்கு எங்களின் ஆதரவை தெரிவித்துவிட்டு வந்தோம்” எனக்கூறினார்.