1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (09:52 IST)

சரியா பேப்பர் திருத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை! – அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி!

பள்ளி பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.



தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.

இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில், பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் காவல் வழங்கப்பட வேண்டும். வினாத்தாள்கள் கசிந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


அதுபோல பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளின் முதன்மை கண்காணிப்பாளராக அந்த பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களை நியமிக்கக் கூடாது என்றும், ஒவ்வொரு பாடத்தேர்வுக்கும் அந்த பாடம் தொடர்பான ஆசிரியரை தேர்வு பணியில் ஈடுபடுத்தாமல் வேறு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த பொதுத்தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக ஈடுபடாத 1000 ஆசிரியர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Updated by Prasanth.K