புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:56 IST)

அத்திவரதர் வைபவத்தில் பிறந்த ஆண் குழந்தை – பக்தர்கள் ஆச்சர்யம்

அத்திவரதரை தரிசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் திடீர் பிரசவ வலியால் ஆண் குழ்ந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அதிசய நிகழ்வான அத்திவரதர் தரிசனத்தை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் லட்சகணக்கில் வருகை புரிகின்றனர். வரும் 16ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் விஜயா என்ற கர்ப்பிணி பெண் ஒருவர் அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளார். அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோவில் அருகே உள்ள முகாமுக்கு அவரை கொண்டு சென்றனர். அவசர ஊர்தி மருத்துவ உதவியாளரும், செவிலியரும் விஜயாவுக்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறகு தாயும், சேயும் பத்திரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பெருமாளை தரிசிக்க வந்த பெண்ணுக்கு வரதராஜ பெருமாள் கோவிலின் அருகிலேயே பிரசவம் நடந்து குழந்தை பிறந்த சம்பவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.