திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (08:58 IST)

பயங்கரவாத அச்சுறுத்தல்: தமிழகம் முழுவதும் நாளை பலத்த பாதுகாப்பு

காஷ்மீர் மசோதாவால் பயங்கரவாதிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் அசம்பாவிதம் ஏற்படுத்தக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளதால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நாட்டின் 73-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வைத்து உரையாற்ற உள்ளார். அதை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நிகழ்வுகளும் நடைபெறும்.

அதேபோல தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடையை ஏற்றி உரையாற்ற இருக்கிறார். முந்தைய சுதந்திர தினங்களை விட இந்த முறை நாடெங்கிலுமே ஒரு பதற்ற சூழல் நிலவுகிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிரொலியாக பயங்கரவாதிகள் நாடெங்கிலும் பயங்கரவாத சம்பவங்களை நடத்த திட்டமிடுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. மேலும் நாளைய சுதந்திர தின விழாவிற்கு நாடெங்கிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்ததால் “ரெட் அலர்ட்” விடப்பட்டது. அதுமுதல் தீவிரமான சோதனைகளுக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் வழங்கப்படும் இந்த உச்சக்கட்ட பாதுகாப்பு இந்த மாதம் இறுதி வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் போலீஸார் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.