சென்னை புத்தக கண்காட்சி நிறைவு: ரூ.15 கோடிக்கு புத்தகம் விற்பனையானதாக தகவல்
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக அனைத்து ஆய்வுகளும் கூறி வரும் நிலையில் சென்னையில் இன்றுடன் முடிவடைந்த புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை விட அதிகளவு புத்தகங்கள் விற்பனையாகி சாதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு பள்ளியில் 41வது புத்தக காட்சி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 40வது புத்தக கண்காட்சியில் ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது புத்தக ரசிகர்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. என்னதான் ஆன்லைன், டிஜிட்டலில் படிக்கும் வழக்கம் அதிகரித்தாலும் புத்தகம் படிக்கும் மன நிம்மதி எதிலும் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.