பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியருக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் லயோலா கல்லூரி
சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து, கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் ராஜராஜனால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி, தற்போது கல்லூரி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த கண்ணீர் பேட்டி.
FILE |
என்னுடைய பெயர் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தி. நான் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சென்னை லயோலா கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2008ஆம் ஆண்டு முனைவர் சி.அ.இராஜராஜன் தமிழ்த்துறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்தேபலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது, விடுப்பு விண்ணப்பத்தை முகத்தில் தூக்கியெறிந்து கேவலமாகப் பேசுவது என்று செயல்பட்டார்.
அவரது மனித உரிமை மீறல் செயல்களின் உள்நோக்கம் என்னவென்று அப்போது எனக்குத் தெரியவில்லை. என்னைத் தொடர்ந்து இழிவுபடுத்தியதால் பேராசிரியர் சி.அ.இராஜராஜனுடைய மேற்சொன்ன செயல்களைக் குறிப்பிட்டு 28.07.2008 அன்று அப்போதைய கல்லூரி முதல்வர் Fr.ஆல்பர்ட் முத்துமாலை அவர்களிடம் எனது இராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். அவர் இராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்து, எனது பணியைத் தொடர கேட்டுக்கொண்டார். அதன் பிறகும் பேராசிரியர் சி.அ.இராஜராஜன் தொடர்ந்து எனக்கு பாலியல் வன்கொடுமைகளை இழைத்து என்னைத் துன்புறுத்தினார்.
2008 ஆம் ஆண்டு எனக்கு வழங்கப்படவிருந்த பணி நிரந்த நியமனத்தை ரத்து செய்ய வைத்து, அதன்மூலம் என்னை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரிடம் ஆய்வு மாணவியாக சேரும்படி வற்புறுத்தியதுடன் லாட்ஜில் வந்து தங்கும்படியும், கேவலமாகப் பேசினார். துறையில் எனக்கு வழங்கிய இடத்தை மாற்றி அவருடைய அறையிலேயே அமர வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தினார்.
மேலும், ‘புருஷன் இல்லாம காய்ஞ்சு போய் கிடக்கிற. என் ஆசைக்கு இணங்கிவிடு’ என்றும், பலர் முன்னிலையில், ‘உன்னோட உடம்பில ஒரு ஓட்டை இருக்குது. அதை அடைப்பது எப்படின்னும் எனக்குத் தெரியும்’ என்றும் ஆபாசமாகப் பேசினார். அவருடைய விருப்பத்திற்கு அடிபணிய மறுத்ததால் நான் வகுப்புக்குச் செல்வதில்லை என்றும் ஒழுங்காக வேலை செய்வதில்லையென்றும் நிர்வாகத்திடம் பல பொய்யான புகார்களைக் கொடுத்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். இவருடைய மிரட்டல் செயல்களுக்கு தமிழ்த்துறையில் பணிபுரியும் பேராசிரியர் அ.பிரின்ஸ் என்பவரும் தொடக்கத்திலிருந்தே உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியை பணி ஆற்றியதோடு, சைஃப் (SIFE - Students in Free Enterprise) என்ற உலக அளவிலான கல்லூரி அமைப்பிற்கும், மே 2011 வரை பொறுப்பாளராகவும் நான் இருந்ததால், அதற்கென்று தனியாக எனக்கு அலுவல் அறை வழங்கப்பட்டிருந்தது. கல்லூரி கேன்டீனிற்கு மேல், சற்று ஒதுக்குப்புறமாக இருக்கின்ற அந்த அறைக்கே வந்து பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதனால், ஒரு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
