ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 20 டிசம்பர் 2014 (21:32 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி

புதுக்கோட்டையில் கணவனைக் கள்ளக்காதலன் மற்றும் கூலிப் படையினர் உதவியுடன் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கீழக்கரும்பிரான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது அண்ணன் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல்துறை ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், புஷ்பராஜை கொல்ல அவருடைய மனைவி ராதா, கள்ளக்காதலன் காரைக்குடியைச் சேர்ந்த கைலாசத்துடன் சேர்ந்து திட்டமிட்டார். சம்பவத்துக்கு முதல்நாள் இரவே கொலை செய்ய முயன்று முடியவில்லை. இதனால் கைலாசம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த சிலர் புதுக்கோட்டையில் தங்கியுள்ளனர்.

மறுநாள் காலை வந்துள்ளனர். அப்போது ஒருவர் தெருவிலும், மற்றொருவர் மாடிப் படியிலும் நின்று கொள்ள மேலும் 2 பேர் மாடி வீட்டில் புஷ்பராஜை  அடித்துக் கொலை செய்தனர். பின்னர் ராதா ஒன்றும் தெரியாததுபோல், மொட்டை மாடிக்குத் சென்று துணி காயப்போடுவது போல் சென்று கணவரின் உடலை பார்த்து கதறி நடித்துள்ளார்.

அவரது தங்கை சுதா திட்டமிட்டபடி கல்லூரி சென்றுவிட்டார். கொலையை செய்துமுடித்ததும், கூலிபடையினர் கூலியை உடனே கேட்டுள்ளனர். ராதாவால் பணத்தை உடனே கொடுக்க முடியாததால், தாலி செயினை கழற்றி கொலையாளிகளிடம் கொடுத்ததோடு புஷ்பராஜ் வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த ரூ.65 ஆயிரத்தையும் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ராதா, அவரது தங்கை சுதாவை போலீசார் கைதுசெய்த நேற்றிரவே ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராதாவின் தந்தை ஆசைலிங்கம் காரைக்குடியில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுவதால் அவருக்கும், இச்சம்பவத்தில் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.