வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

வாழ்வின் படிநிலைகளைசொல்லும் கொலு தத்துவம் என்ன...?

தமிழ்நாட்டில் நவராத்திரித் திருவிழாவது தனித்துவமாகக் கொண்டாடப் படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பொம்மைக் கொலுக்கள் வைத்தும், இன்னும் பல வீடுகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது.


இந்த நவராத்திரி விழாவின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் தைரியம் மற்றும் அருளைப் பெறுவதற்காகவும், அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியின் செழிப்பைப் பெறுவதற்காகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியிடமிருந்து கலை, கல்வி, அறிவு, ஞானத்தைப் பெறுவதற்காகவும் கொண்டாடப் படுவதாக  ஐதீகம்.
 
மஹாளய அமாவாசையன்று கலசம் வைத்து பொம்மைக் கொலுவைத் துவங்குகிறார்கள். 3, 5, 7, அல்லது 9, 11 என்று அவரவர் வசதிக்கேற்ப படிகள் அமைக்கப்பட்டு அதில் தெய்வங்கள், மகான்கள், முனிவர்கள், தசாவதாரம், அஷ்டலஷ்மி, செட்டியார், மரப்பாச்சி, விலங்குகள், மரம், செடி, கொடிகள் பொம்மைகளை வரிசையாக வைத்து காலை, மாலை பூஜை, பாடல்கள் என்று உறவினர்கள், தெரிந்தவர்களை அழைத்து தாம்பூலம் வழங்கி ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல், பலகாரங்களுடன் மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். 
 
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும். ஒவ்வொரு படிகளும் ஒவ்வொரு தத்துவத்தை மிக எளிதாக சொல்லிச் செல்கின்றன. வாழ்வில் படிநிலையைச் சொல்லும் கொலு தத்துவம்.
 
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். 
 
‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.

அன்னையின் அந்த வார்த்தையை சுரதா என்ற மன்னன் கடைப்பிடித்து, தன் பகைவர்களை வீழ்த்தியதோடு, பலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுதலை அடைந்தான். எனவே கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது என்பது நவராத்திரி விழாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.