புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 9 மே 2022 (17:40 IST)

கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பதற்கான சில எளிய குறிப்புகள் !!

Skin color
கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.


வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.

வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.

கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கலாம். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.