1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 26 பிப்ரவரி 2022 (09:53 IST)

பிரண்டையை எந்த முறையில் தயாரித்து சாப்பிடவேண்டும் தெரியுமா...?

பிரண்டையில் பல வகைகள் உள்ளன. இரண்டு பட்டை பிரண்டை, மூன்று பட்டை பிரண்டை என்றும் உருட்டு, ஓலை, கதிர் பிரண்டை எனவும் செடி பிரண்டை, கொடி பிரண்டை, மர பிரண்டை பெரும்பிரண்டை, சிறுபிரண்டை, காட்டுப்பிரண்டை, சதுர பிரண்டை, முப்பிரண்டை, களிபிரண்டை, தீம்பிரண்டை, புளி பிரண்டை, கணுப்பிரண்டை என பலவகைப் பிரண்டைகள் உள்ளன.


இத்தனை பிரண்டை இருந்தாலும் நான்கு பட்டை உள்ள பிரண்டையே எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. அதுதான் பெரும்பாலும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டை மனிதனின் எலும்புக்கு உள்ளே உள்ள மஜ்ஜை எனப்படும் எலும்புச்சோற்றின் ஏற்றத்தாழ்வை சமப்படுத்தி எலும்புகளின் இணைப்பில் உள்ள பசை, நீர், வாயு போன்றவை கூடினாலோ குறைந்தாலோ அவற்றை சமப்படுத்தி இயல்பாக இருக்கச் செய்யும். அந்தவகையில் முதுகுத்தண்டு, இடுப்பு, மூட்டு எலும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய பிரண்டை உதவும்.

பிரண்டையை பலவகைகளில் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். பிரண்டையை தொடுவதற்குமுன் கைகளில் நல்லெண்ணெய் தடவிக்கொள்ளலாம் அல்லது புளியையும், உப்பையும் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்து கொள்ளலாம். இல்லையென்றால் கையுறை மாட்டிக்கொள்ளலாம். துவையல் செய்யும்போது கட்டாயம் புளி சேர்க்க வேண்டும். நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும். இப்படிச் செய்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அரைகுறையாகச் செய்தால் நிச்சயம் பிரச்சினை ஏற்படும். துவையல் அரைக்க முற்றிய பிரண்டையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பிரண்டையின் மேல்பகுதியில் உள்ள நாரினை உரித்து எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவேண்டும். பச்சை நிறமாக இருக்கும் பிரண்டை பொன் நிறமாக மாறும்வரை வதக்க வேண்டும். அதன்பிறகு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, சுவைக்காக உளுந்து, தேங்காய் சேர்த்து அவற்றையும் வதக்க வேண்டும். சூடு ஆறியதும் அம்மியில் வைத்து மையாக அரைக்கலாம்.