புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலில் உள்ள நச்சு பொருட்களை நீக்கும் அறுகம்புல் சாறு...!

அறுகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண்  புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம்  போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.
காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய  வழியாகும்.
 
அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம  உப்புக்கள் பலவும் உண்டு.
அறுகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே  முறையைக் கையாளலாம்.
 
அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும்  ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயற்படுகின்றது.