ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க மேலைநாடுகள் எதிர்ப்பு! – கண்டுகொள்ளாத இந்தியா!
ரஷ்யாவிடம் இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்தியா தனது முடிவில் உறுதியாக உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள் விதித்துள்ளடதுடன், ரஷ்யாவிடம் வர்த்தக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என பிற நாடுகளை வற்புறுத்தி வருகின்றன.
ஆனால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதற்கு உலக நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளபோதும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி “நாட்டின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு முடிவெடுக்கிறோம். பல்வேறு நாடுகளும் இதே கண்ணோட்டத்தில் கொள்கை முடிவு எடுத்துள்ளதை அறிந்திருப்பீர்கள். எனவே இது இந்தியா மட்டும் சம்பந்தபட்ட பிரச்சினை அல்ல. இந்தியாவை விட ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குகின்றன” என தெரிவித்துள்ளார்.