பழங்குடியினரை வெறுக்கும் மத்திய அரசு..! அரசியலில் இருந்து விலக தயார்..! பாஜகவுக்கு ஹேமந்த் சோரன் சவால்..!!
தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். அதன் பின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார்.
சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து அமலாக்கத்துறையினருடன் ஹேமந்த் சோரன் பேரவைக்கு வந்தார் . நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய அவர், அமலாக்க துறையால் நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும் என தெரிவித்தார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை பாஜக நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார். ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும் பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை என்றும் கூறினார்.