1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (13:06 IST)

லஞ்சம் வாங்கும் எம்பி எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! பிரதமர் மோடி வரவேற்பு..!

supremecourt
லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
 
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கினால் குற்றம் தான் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு லஞ்சம் வாங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
 
சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழல் அல்லது லஞ்சம் பொது வாழ்க்கையில் நேர்மையை அழிக்கிறது என்று கூறிய உச்சநீதிமன்றம் லஞ்சம் வாங்குவதே குற்றமாகும்" என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் செயல்பாட்டுடன் தொடர்பில்லாத எந்தவொரு சிறப்புரிமையையும் வழங்குவது நாட்டின் சட்டத்தின் செயல்பாட்டிலிருந்து தடையற்ற விலக்குகளை அனுபவிக்கும் ஒரு வர்க்கத்தை உருவாக்க வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
 
எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள் உரை அல்லது வாக்கெடுப்புக்காக லஞ்சம் வாங்கும் வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கிறது என்று ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு 1998 ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்தது. இது ஒருமித்த முடிவு என்று  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் கூறினார்.

 
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,  உச்சநீதிமன்றத்தின் ஒரு சிறந்த தீர்ப்பு, தூய்மையான அரசியலை உறுதி செய்யும் மற்றும் அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.