நாக்கை அறுத்து காணிக்கை குடுத்த முரட்டு பக்தர்..! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேசத்தில் கோவில் ஒன்றில் பக்தர் ஒருவர் நாக்கை வெட்டி காணிக்கை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு கோவில்கள் உள்ள நிலையில் கோடிக்கணக்கான மக்கள் புனித ஸ்தலங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் வேண்டுதல் வைத்து நேர்த்திக் கடன் செய்வது, முடி காணிக்கை செலுத்துவது என செய்வது வழக்கம். ஆனால் சில சமயங்களில் பக்தி மிகுதியால் ஆபத்தான சில காணிக்கைகளையும் பக்தர்கள் அளிப்பது உண்டு.
உத்தர பிரதேசத்தின் கவுசாம்பி பகுதியில் வசித்து வருபவர் சம்பந்த். இவர் அப்பகுதியில் உள்ள மா ஸ்ரீதலா அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என அவரது மனைவி பன்னோ தேவியிடம் கூறியுள்ளார்.
இதனால் வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீதலா அம்மன் கோவிலுக்கு சென்ற அவர்கள் கங்கையில் புனித நீராடிவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வந்துள்ளனர். அப்போது பிரகாரத்தின் நேரெதிரே வந்தபோது சம்பந்த் திடீரென கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டிக் கொண்டார்.
இதை பார்த்து அவரது மனைவி மற்றும் சக பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பக்தி மிகுதியால் சம்பந்த செய்த இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.