இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற ராணுவ வீரர்! – கைது செய்த பயங்கரவாத ஒழிப்பு படை!
இந்திய ராணுவத்தின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இந்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடக்கு எல்லைகள் சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் இணைந்துள்ளன. இந்த எல்லை பகுதிகளில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் தொடர்ந்து இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை திருட பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயன்று வருகின்றன. இந்நிலையில்தான் இந்திய ராணுவம் குறித்த ரகசியத்தை இந்திய ராணுவ வீரர் ஒருவரே பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை பூஜ் பகுதியில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் புதிய கட்டுமான பணிகள் குறித்த விவரங்களை எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரியும் நிலேஷ் வல்ஜிபாய் என்ற வீரர் வாட்ஸப் மூலம் பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த குற்றத்திற்காக நிலேஷ் வல்ஜிபாயை பயங்கரவாத ஒழிப்பு படை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்திய ராணுவ ரகசியத்தை ராணுவ வீரர் ஒருவரே அண்டை நாட்டுக்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by prasanth.K