பாஜக அமைச்சரிடம் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்! - கருப்புப் பணமா என விசாரணை
மஹாராஷ்டிர மாநில பாஜக அமைச்சரான சுபாஷ் தேஷ்முக்கிற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து ரூ. 91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 08ஆம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததோடு, கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதனால், பொதுமக்கள் தங்களுடைய அத்தியாவசிய செலவுகளுக்கே கையில் பணம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளையும் சில்லறையாக மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது.
100 ரூபாய் மட்டுமே செல்லும் என்பதால், 100 ரூபாய் நோட்டுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களின் புழக்கத்திற்கு விடப்படவில்லை.
இந்நிலையில், இதுவரை 4,500 ரூபாய் வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்த மத்திய அரசு, தற்போது ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில பாஜக அமைச்சரான சுபாஷ் தேஷ்முக்கிற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து ரூ. 91 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
உஸ்மனாபாத் மாவட்டம் உமெர்கா டவுனில், கூட்டுறவுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ் முக்குக்கு சொந்தமாக உள்ள லோக்மங்கல் குழுமத்தில் ஏராளமான கறுப்புபணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு அண்மையில் தகவல் கிடைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனை நடத்தியதில், தேஷ்முக் அவர்களுக்குச் சொந்தமான வாகனத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 91 லட்சம் கைப்பற்றப்பட்டு உள்ளது. கருப்புப் பணம் ஒழிப்பதாக கூறும் மோடியின் கட்சியினரிடம் இவ்வளவு பணமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், வருமான வரித்துறையினரை தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.