வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (08:54 IST)

மோடியின் கருத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்த ராஜ்நாத்சிங்: பாஜகவிற்குள் குழப்பமா?

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய நிலையில் தற்போது இந்தியாவில் மட்டுமின்றி பாஜகவிற்குள்ளும் மோடி அலை ஓய்ந்துவிட்டதாக கருதப்படுகிறது. ஒருவேளை மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் மோடி மீண்டும் பிரதமர் ஆவது சந்தேகமே என தெரிகிறது.
 
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் இந்த பேச்சை பாஜகவில் உள்ள முன்னணி தலைவர்களே ரசிக்கவில்லை. நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 'நான் எந்த அரசியல் கட்சிகளையும் குற்றஞ்சாட்ட மாட்டேன். அனைத்து அரசியல் கட்சிகள் நாட்டிற்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. எல்லா கட்சிகளும் நாட்டிற்கு நிறைய நல்லது செய்து இருக்கிறது. ஆனால் அவர்கள் செயல்படும் விதம் வேறு, நாங்கள் செயல்படும் விதம் வேறு என்பது மட்டுமே உண்மை.
 
இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசியல் அமைப்புகளையும் பாதுகாத்தால் மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும். இல்லையேல் ஜனநாயகம் அழிந்து மிகப்பெரிய பிளவு ஏற்படும். நான் எந்த முன்னாள் பிரதமரையும் விமர்சனம் செய்ய மாட்டேன். அவர்களுக்கு எதிராக நான் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன்' என்று மோடியை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் ராஜ்நாத்சிங் அல்லது நிதின் கட்காரி ஆகிய இருவரில் ஒருவரே பிரதமர் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது