பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்..!
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு நேற்று திருமணம் ஆகி உள்ள நிலையில், அவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஹைதராபாத் சேர்ந்த போசிடெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட தத்தா சாய் என்பவரை பிவி சிந்து நேற்று திருமணம் செய்து கொண்டார். இரு குடும்பத்திற்கும் நீண்ட கால நட்பு இருப்பதாகவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இருவரது திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சிந்துவின் தந்தை ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றதாகவும், இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றதாகவும் நாளை பிரமாண்டமாக ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இதில் அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran