டெல்லி கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ்தான் காரணம்! – பிரகாஷ் ஜவடேகர்!
டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். பல வீடுகளும், கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திற்கு காரணம் மத்திய அரசின் மெத்தனமே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிஏஏ குறித்து மக்களை தவறாக வழிநடத்தியன் விளைவாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்திற்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளே. கலவரம் நடந்த பகுதிகளில் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஆயுதங்களுடன் இருந்த வீடியோ வெளியாகியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வன்முறையிலிருந்து டெல்லியை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும், தற்போது டெல்லியில் அமைதி திரும்பியிருக்கும் சூழலில் அது தொடர அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.