உலகம் முழுக்க கொரோனா போராட்டம்; ஆனா நமக்கு..!? – பிரதமர் மோடி உரை!
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் இந்தியா மட்டும் கொரோனாவுடன் இணைந்து வேறு பல பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொருளாதாரம் பெரும் இடர்பாடுகளை சந்தித்துள்ளது, பொருளாதார மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு துறைகளுக்குமாக 20 லட்சம் கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்திய வர்த்தக சபைக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தியா மட்டும் கொரோனா மட்டுமல்லாமல் வெட்டுக்கிளி தாக்குதல், புயல், பூகம்பம், அசாம் தீ விபத்து என பலவற்றுடன் போராடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.