பெட்ரோல் டீசல் விலை குறைவு – அருண் ஜெட்லி முக்கிய முடிவு
தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலை கட்டுபடுத்தும் முக்கிய முடிவை அறிவித்துள்ளார்
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து 90 ரூபாயை நெருங்கி விற்கப்பட்டு வருகின்றன . தொடர்ச்சியான விலையேற்றத்தால் லாரி வாடகை கட்டணம், ஷேர் ஆட்டோ கட்டணம் உள்பட பல கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாக சொல்ல்ப்பட்டன. எனினும் மத்திய, மாநில அரசுகள் வரியினை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்து பரவலாகக் கூறப்பட்டது. ஆனால் இரு அரசுகளும் இதனை செய்ய மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பிரதமரை சந்தித்த பின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அந்த சந்திப்பில் பெட்ரோல் விலைக் குறைப்பு பற்றிய முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது;- ’பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு 1.50 ரூபாய் குறைக்கப்படுகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களை அதன் உற்பத்தி செலவலிருந்து லிட்டருக்கு 1 ரூபாயைக் குறைத்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாய் குறையும். இதனால் மத்திய அரசிற்கு மொத்தமாக 21000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அதை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.’
மேலும் மாநில அரசுகளையும் பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மாநில அரசுகளும் இதை ஏற்று செயலபடுத்தும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியாக இருக்கும்.