புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் அமலில் இருந்து வந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த மாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடைபெற்ற நிலையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த மசோதாகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து 3 மசோதாக்களும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை விதிக்க கோரி
வழக்கறிஞர் விஷால் திவாரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பெரும்பாலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கத்தில் இருப்பதால் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் எந்தவித விவாதமும் இல்லாமல் இயற்றப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு ஒரு நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.