மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!
அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இன்று மீண்டும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நிலையில் மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே தேர்தல்" உள்பட 15 மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பாராளுமன்றம் அமைதியாக நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் குறித்த பிரச்சனைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் இடுகின்றனர். இதனை அடுத்து, இன்று நண்பகல் 12:00 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்பை காரணமாகக் கொண்டு, நாளை வரை அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், இன்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
இது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், "அவை நிகழ்வுகள் முடங்கியுள்ளது என்பது ஏமாற்றமாக உள்ளது. பாஜக கூட்டணி பெரும்பான்மை கொண்டுள்ளதால், அவர்கள் நினைத்தபடி நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்க அவர்கள் மறுக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Edited by Mahendran