திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (08:59 IST)

அசைவ உணவுகளை கொடுத்தனுப்ப கூடாது: தனியார் பள்ளியின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி..!

பெற்றோர்  தங்கள் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பக்கூடாது என நொய்டாவை சேர்ந்த தனியார் பள்ளி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் இயங்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குழந்தைகளுக்கு மதிய உணவாக டிபன் பாக்ஸில் அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்ட இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காலையில் அசைவ உணவை சமைத்து அதை டிபன் பாக்ஸில் கொடுத்து அனுப்புவதால் மதியத்திற்குள் அந்த உணவு கெட்டுப்போக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தான் இத்தகைய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இதை ஒரு உத்தரவாக குறிப்பிடவில்லை என்றும் ஒரு கோரிக்கையாக மட்டுமே பெற்றோரிடம் முன்வைப்பதாகவும் சைவ உணவுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஒருவருடைய உணவு பழக்கவழக்கத்தை மற்றவர்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று பெற்றோர்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

சைவ உணவாக இருந்தால் கூட கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது என்றும் பள்ளி நிர்வாகம் காரணம் ஏற்புடையது அல்ல என்றும் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பள்ளி நிர்வாகத்தின் இந்த புதிய விதிமுறைக்கு ஒரு சில பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran