பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்தா ? – தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம் !
புல்வாமா தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரியக் கருத்துகளைக் கூறியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜொன் சிங் சித்துவுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
தாக்குதல் தொடர்பாகப் பலரும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பலக் கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகருமான நவ்ஜோன் சிங் சித்து தனது டிவிட்டரில் ’தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற செயலுக்காக ஒரு நாட்டையே பழிசுமத்துவதா, ஒரு தனிநபரை பழிசுமத்துவதா ?’ எனக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து சித்துவின் இந்தக் கருத்து பாகிஸ்தானுக்கு ஆதரவானது என எடுத்துக்கொண்ட இணையவாசிகள் அவருக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கபில் சர்மாவுடன் சித்து இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சித்துவை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து நீக்க அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.