பாகிஸ்தான் ஜிந்தாபாத் ; பொதுமக்கள் ஆவேசம் – ரயில்வே ஊழியர் கைது !
புல்வாமாவில் நடைபெற்றத் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். மேலும் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறது.
மும்பைக்கு அருகில் உள்ள லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது அங்கு வந்த உபேந்திர குமார் பகதூர் சிங் என்ற ரயில்வே ஊழியர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷங்களை எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைத் தாக்க முயற்சி செய்துள்ளனர். அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவரை மக்களிடம் இருந்து காப்பாற்றி கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிப்ரவரி 18ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.