அரசியல் நெருக்கடி - தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்!
அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இதனிடையே சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேருடன் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை அரசியல் கூட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதித்து தானே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.