1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:13 IST)

இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?

Ship
யுவான் வாங் 5 என்ற சீனாவின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவிருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது.
 
காரணம், இந்து மகாசமுத்திரத்திற்குள் இந்த கப்பல் வருவது இலங்கையின் நட்பு நாடான இந்தியாவை அதிக கண்காணிப்பை மேற்கொள்ளத் தூண்டியிருக்கிறது. இந்த கப்பலின் வருகையானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இந்திய ஊடகங்கள் மாத்திரமன்றி, தென் இந்திய அரசியல்வாதிகளும் கூறுகின்றனர்.
 
யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவிக்கின்றார்.
 
இதன்படி, ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நங்கூரமிடவுள்ளது.
 
எரிபொருள் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தரவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
''இது முதல் தடவையாக வருகைத் தருகின்ற கப்பல் கிடையாது. சீனா, இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இதற்கு முன்னர் இவ்வாறான கப்பல்கள் வருதைக் தந்துள்ளன. வணிக கப்பலை போன்று, கடற்படைக்கு சொந்தமான கப்பல்களும் வருகைத் தருகின்றன" என அவர் குறிப்பிடுகின்றார்.
 
யுவான் வாங் 5 என்ற கப்பல் என்ன?
 
யுவான் வாங் 5 (IMO: 9413054) என்ற கப்பலானது, 2007ம் ஆண்டு (15 வருடங்களுக்கு முன்பு) சீனாவின் தேசிய கொடியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலாகும்.
 
இந்த கப்பலில் 11000 மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்பதுடன், கப்பல் 222 மீட்டர் நீளமும், 25.2 அகலமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.
 
யுவான் வாங் தரத்திலான கப்பல்களில் மூன்றாவது பரம்பரையை கொண்ட கப்பலே இந்த யுவான் வாங் 5 ஆகும். ஜியாங்கனன் கப்பல் நிர்மாண தளத்தில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சீனாவின் விண்கல கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, நாட்டின் Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றது.
 
2000ம் ஆண்டு ஆரம்ப காலத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையததில் உறுப்பு நாடாக சீனா ஆர்வம் காட்டியது. எனினும், சீனாவின் உறுப்புரிமைக்கான கோரிக்கை பல முறை நிராகரிக்கப்பட்டது. இந்த பின்னணியிலேயே, யுவான் வாங் 5 போன்ற அறிவியல் ஆராய்ச்சி கப்பல் சீனாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
 
 
இந்தியா மிகுந்த அவதானம் மற்றும் கவலையுடன்
 
 
விண்வெளி மற்றும் செயற்கை கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை கொண்டமைக்கப்பட்டுள்ள யுவான் வாங் 5 ஆய்வு மற்றும் கண்காணப்பு கப்பலானது, சீனாவின் உளவு கப்பலாவே இந்திய ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன.
 
இந்த கப்பலின் வான் வழி 750 கிலோமீற்றருக்கு அதிகமாக உள்ளமையினால், தென்னிந்தியாவின் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற இந்திய எல்லைக்குள் காணப்படுகின்ற அணு ஆராய்ச்சி மையங்களை மறைமுகமாக இந்த கப்பலினால் கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த கப்பலுக்கு கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளிலுள்ள துறைமுகங்களையும் கண்காணிக்க முடியும் என கூறப்படுகின்றது. தென்னிந்தியாவிலுள்ள 6 துறைமுகங்கள் சீனாவின் அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தென்னிந்தியாவிற்கு அண்மித்துள்ள மிக முக்கிய இரகசிய இடங்கள் தொடர்பிலான தகவல்களையும் இந்த கப்பலினால் திரட்டிக் கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த கப்பல் குறித்து, கடந்த வார முதல் காலப் பகுதியில் புதுடில்லி அவதானம் செலுத்தியுள்ளது.
 
இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிலாஷைகளை பாதிக்கும் எந்தவொரு விடயத்தையும் மிக கவனமாக கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி, வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 
இந்த கப்பல் தொடர்பில் இந்தியா தேவையற்ற கவலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, குறித்த தரப்பினர் தமது சட்ட ரீதியிலான கடல் சார் நடவடிக்கைகளில் தலையீடு செய்வதிலிருந்து தவிர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக சீனா தரப்பு பேச்சாளர் ஒருவர், ரொயிட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
 
சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகமானது, தமக்கு அண்மித்த ராணுவ முகாமாக சீனா பயன்படுத்தி வருவதாக இந்தியா கவலை வெளியிடுகின்றது. 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகமானது, ஆசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் பிரதான கடல் மார்க்கத்தின் முக்கிய துறைமுகமாக விளங்குகின்றது.
 
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்திலேயே யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளது.
 
இந்த கப்பலின் பயணம் குறித்து, இந்தியா இலங்கைக்கு வாய்மூலமாக தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சீனா அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருங்கடலை, சுதந்திரமாகவும், சட்டரீதியாகவும் பயன்படுத்தி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சு, ரொயிட்டஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது.
 
''சீனாவின் சமுத்திர விஞ்ஞான ஆய்வு நடவடிக்கைகளை சரியாக கண்காணித்து, குறித்த தரப்பினர் அறிக்கையிடுவார்கள் என சீனா எதிர்பார்க்கின்றது. சாதாரண மற்றும் சட்டரீதியிலான சமுத்திர செயற்பாடுகளில் தலையீடு செய்வதிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்" என சீன அமைச்சு குறிப்பிடுகின்றது.
 
யுவான் வாங் கப்பல்கள், மக்கள் விடுதலை ராணுவத்தின் (பீ.எல்.ஏ) மூலோபாய ஆதரவு படையால் செயற்படுத்தப்படுகின்றது என சீனாவின் ராணுவ நவீனமயமாக்கல் தொடர்பிலான பென்டகனின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கப்பல் எங்கே செல்கின்றது?
 
 
யுவான் வாங் 5 என்ற கப்பல் கடந்த ஜுலை 13ம் தேதி சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், அந்த கப்பல் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
 
இவ்வாறான கப்பல் வருகைத் தருகின்றமை, அசாதாரணமானது கிடையாது என கேணல் நலீன் ஹேரத் தெரிவிக்கின்றார்.
 
யுவான் வாங் 5 கப்பல், ஒரு வார காலத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு நங்கூரமிட்டிருக்கும் என்பதுடன், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்து சமுத்திர வலயத்தின் வடமேல் பகுதியில் விண்வெளி கண்காணிப்பு, செயற்கை கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படும் என இலங்கையின் ஆலோசனை நிறுவனமான Belt & Road Initiative Sri Lanka குறிப்பிடுகின்றது.
 
2014ம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் ராணுவ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தர இலங்கை இடமளித்தமை தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
 
வலயத்திற்குள் மீண்டும் அமைதியின்மை
 
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வருகைத் தருகின்றமையானது, வலயத்திற்குள் மீண்டும் அமைதியின்மையை தோற்றுவிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
 
''வேறு நாடுகளுக்கு இடையில் காணப்படுகின்ற மோதல் தொடர்பில், தாம் ஒரு பக்கத்திற்கு மாத்திரம் எடுப்பதில்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
 
ஆனால், இந்து சமுத்திரத்தில் சீன படைகள் இருப்பதானது, இந்தியாவிற்கு நியாயமான பாதுகாப்பு கவலையை ஏற்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.
 
சீன படையினர் இலங்கையில் தங்குவதற்கு இடமளிப்பதன் மூலம் அதனை இலங்கை வலியுறுத்த கூடாது என தாம் தொடர்ந்தும் தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.
 
சீனாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடு
 
ஹம்பாந்தோட்டை துறைமுகம்
 
இந்தியாவை தூண்டும் செயற்பாடுகளிலேயே சீனா தற்போது ஈடுபட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் பிரிவில் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ஹஷித்த கந்தஉடஹேவா தெரிவிக்கின்றார்.
 
கடந்த 6 மாத காலப் பகுதியில் இந்தியா, இலங்கையில் பாரிய மனிதாபிமான உதவிகள் மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது என அவர் கூறுகின்றார்.
 
 
இலங்கைக்குள் இந்தியா தொடர்பிலான நன்மதிப்பை மேம்படுத்திக் கொள்ள இதனூடாக இந்தியாவிற்கு இயலுமை ஏற்பட்டது. முதலாவதாக பதில் வழங்கியவர்கள் என்ற கருத்தை ஸ்தாபித்துள்ளனர். தமது வலயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது, முதலில் தலையீடு செய்கின்றமையானது, வலயத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாவது காரணியாகும். இந்தியா அவ்வாறு தலையீடு செய்தது. கடந்த காலத்தில் சீனா, வலயத்திற்குள் சரியான ஆதரவை இலங்கைக்கு வழங்கவில்லை. சீனாவிற்கு தமக்கு அதிகாரத்தை காணப்பிப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதுவே அவர்கள் தமது கப்பலை அனுப்புகின்றனர். 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி சீனாவின் நீர்மூழ்கி கப்பல், இலங்கைக்கு வருகைத் தந்ததன் பின்னர், முதல் தடவையாக இவ்வாறான சீனாவின் கப்பல் ஒன்று நாட்டிற்குள் வருகின்றது. என சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ஹஷித்த கந்தஉடஹேவா தெரிவிக்கின்றார்.
 
''இரண்டு தரப்பிற்கும் முடியாது என கூற முடியாத நிலையில் இலங்கை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு சீனா ஒரு புறத்தில் தேவைப்படுகின்றது. மறுபுறத்தில், மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு இந்தியா தேவைப்படுகின்றது. சீனாவின் கப்பல் ஒன்று இங்கு வருவதற்கு இந்தியா விருப்பப்படாது. இந்தியாவின் கிழக்கு கடற்படை பிரிவு தற்போது அவதானத்துடன் இருக்கின்றது" என அவர் கூறுகின்றார்.
 
''இந்த கப்பல் ஏன் வருகின்றது என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தெரியாது. இது தொடர்பில் பிரச்சினை ஒன்று காணப்படுகின்றது. உலகிலுள்ள அதிவுயர் ரகசிய கப்பல்களை தவிர, ஏனைய கப்பல்களிலுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்கள் சாதாரணமாக பெற்றுக்கொள்ள முடியும். எனினும், சீன கப்பல் தொடர்பில் அவ்வாறான பெரியளவிலான தகவல்கள் கிடையாது" என அவர் குறிப்பிடுகின்றார்.
 
''யுவான் வாங் 5 என்பது கண்காணிப்பு அமைப்புடன் கூடிய விண்வெளி கண்காணிப்பு கப்பலாகும். இது முழுமையாக தமது அதிகாரத்தை காண்பிக்கும் செயற்பாடு" என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் பிரிவில் சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி ஹஷித்த கந்தஉடஹேவா தெரிவிக்கின்றார்.