வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (00:49 IST)

கோவிட்-19 தொற்று காரணமாக சீனாவின் முக்கியத் துறைமுகம் மூடல்: உலக வணிகத்துக்கு அச்சுறுத்தல்

நிங்போ ஜோஷான் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சரக்குப் பெட்டக கப்பல்கள்.
 
சீனாவின் நிங்போ ஜோஷான் துறைமுகத்தில் ஒரு தொழிலாளிக்கு கோவிட் 19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அத்துறைமுகத்தின் ஒரு முனையம் மூடப்பட்டுள்ளது. இது உலக வணிகத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
அந்த முனையத்தின் சேவைகள் புதன்கிழமை முடக்கப்பட்டன.
 
பாதிப்புக்குள்ளான தொழிலாளியைத் தாக்கியது கொரோனா வைரசின் ஆபத்தான திரிபாகக் கருதப்படும் டெல்டா திரிபு என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த துறைமுகம், ஷாங்காய், சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய துறைமுகமாகும்.
 
 
 
இந்த முனையம் மூடப்பட்டதால், கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீசனுக்கு முன்பாக சப்ளை தொடரில் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
மெய்ஷான் தீவில் உள்ள இந்த முனையம் அடுத்து அறிவிப்பு வெளியாகும்வரையில் மூடப்பட்டதால் பெட்டக சரக்கு போக்குவரத்தை கையாளும் அந்த துறைமுகத்தின் திறன் கால்வாசி பாதிக்கப்பட்டுள்ளது.
 
சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை அடைவதற்கான கப்பல் போக்குவரத்து செலவு ஏற்கெனவே வரலாறு காணாதபடி அதிகரித்துள்ளதாக ஃப்ரைட்டோஸ் பால்டிக் குளோபல் கண்டெய்னர் போக்குவரத்து குறியீடு குறித்துள்ளது. இந்நிலையில்தான் இந்த முனையம் மூடப்பட்டுள்ளது.
 
சில பிரிட்டன் வணிக நிறுவனங்கள் சரக்குப் போக்குவரத்து செலவு அதிகரிப்பின் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.
 
உலக கப்பல் போக்குவரத்துத் துறை பெருந்தொற்றின் தாக்கத்தை இன்னும் பல மாதங்களுக்கு உணரும் என்று ஓஷன் ஷிப்பிங் கன்சல்டன்ட்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஜேசன் சியாங் பிபிசியின் ஏஷியா பிசினஸ் ரிப்போர்ட்டுக்குத் தெரிவித்தார்.
 
உலகத்தால் கைவிடப்படும் ஆப்கானிஸ்தான் - போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை
இலங்கையில் கொரோனா தடுப்பூசி அட்டை இல்லாமல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது: அரசு அறிவிப்பு
 
"இன்னும் இரண்டாண்டுகளுக்கு கப்பல் போக்குவரத்துத் திறன் அதிகரிக்கும் வாய்ப்பு ஏதும் இல்லை. எனவே இப்போதிருந்து இரண்டாண்டுகளுக்கு எல்லாம் எப்படி பெருந்தொற்று செயலாற்றுகிறது என்பதைப் பொருத்துதான் இருக்கிறது" என்று கூறியுள்ளார் அவர்.
 
கிழக்கு ஆசியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் பொருள்களை அனுப்பவேண்டியவர்களுக்கு இது பெரிய அடி என்று பிபிசி வணிகச் செய்தியாளர் தியோ லெக்கட் கூறுகிறார்.
 
நிங்போ ஜோஷான் துறைமுகம் உலகின் மூன்றாவது பெரிய துறைமுகம்.
 
நிங்போ ஜோஷான் துறைமுகம் உலகின் மூன்றாவது பெரிய துறைமுகம்.
 
இந்த முனையம் நீண்ட காலத்துக்கு மூடியிருந்தால் அது உலக பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கம் செலுத்தும்.
 
இந்த துறைமுகம் அமைந்துள்ள நிங்போ நகரில் இருந்து சீனாவின் தலைநகர் பெய்ஜிங் செல்கிற, அங்கிருந்து வருகிற விமான சேவைகளையும் நிறுத்திவைத்துள்ளனர்.
 
துறைமுகத்துக்கு அருகில் உள்ள மாவட்டத்திலும் பகுதியளவு முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிம், பார், சினிமா அரங்குகள் மூடப்பட்டுள்ளன.
 
கிறிஸ்துமஸ் சீசன்
ஐரோப்பாவும், அமெரிக்காவும் கிறிஸ்துமஸ் சீசனில் விற்பனை திடீரென அதிகரிக்கும் என்று அதற்கான தயாரிப்பில் இருக்கும் என்பதால் ஒவ்வோர் ஆண்டின் இரண்டாவது பாதியிலும் வணிக நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும். அது போன்ற ஒரு நிலையில்தான் துறைமுகத்தின் ஒரு முனையம் மூடப்பட்டுள்ளது.
 
சமீப மாதங்களில் கொரோனா காரணமாக சீனாவில் துறைமுகம் மூடப்படும் இரண்டாவது நிகழ்வு இது. முன்னதாக யான்டியன் ஷென்ஷேன் துறைமுகம் மே மாதம் பகுதியளவு மூடப்பட்டது.