விமானத்தில் இந்தியர்கள் கடத்தல்..? பிரான்சில் நிறுத்தப்பட்டு இந்தியாவுக்கு திரும்பிய விமானம்!
துபாயிலிருந்து நிகாரகுவா புறப்பட்ட விமானத்தில் இந்தியர்கள் கடத்தப்படுவதாக வெளியான புகாரின் பேரில் பிரான்சில் நிறுத்தப்பட்ட விமானம் இந்தியாவிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-340 ரக விமானம் ஒன்று மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாரகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நோக்கி சென்றுள்ளது. செல்லும் வழியில் பராமரிப்பு பணிகள் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸ் நாட்டின் வேட்ரி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருந்ததால் சந்தேகமடைந்த பிரான்ஸ் அரசு விமானத்தில் உள்ள பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டது. இதனால் கடந்த 21ம் தேதி முதலாக 4 நாட்களாக விமானம் பிரான்சில் நிறுத்தப்பட்டிருந்தது.
பயணிகள் கடத்தப்பட்டு பல்வேறு பணிகளுக்காக நிகாரகுவா கொண்டு செல்லப்படுகிறார்களா என அவரது ஆவணங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் சிலர் தங்களுக்கு பிரான்ஸ் நாட்டிலேயே அடைக்கலம் தர வேண்டும் என விசாரணை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விமானம் துபாய்க்கோ, நிகாரகுவாவுக்கோ அனுப்பப்படாமல் பெரும்பாலும் இந்திய பயணிகள் இருப்பதால் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த விமான மும்பை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அதில் உள்ள பயணிகளிடம் இந்திய விமான அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். அதற்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும். எனினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K