1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : புதன், 3 ஏப்ரல் 2019 (10:34 IST)

ஆந்திராவின் பாகுபலி நான்! மோடியைக் கலாய்த்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவின் பாகுபலி நான் என அம்மாநில முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பேசியிருக்கிறார். 
ஆந்திர மாநிலத்துக்கு அளிக்கப்பட வேண்டிய சிறப்பு அந்தஸ்து கேட்டு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுடன் போராடி வருகிறார், உறுதியளித்தபடி நடக்கவில்லை என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெலுங்கு தேசம் கட்சி சமீபத்தில் அறிவித்தது. அதன்பின்னர் மோடி மற்றும் பா.ஜ.கவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் சந்திரபாபு நாயுடு.
 
மக்களவைத் தேர்தலை ஒட்டி ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சந்திரபாபு நாயுடு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். திருப்பதி அருகே புதால்பட்டு மற்றும் சித்தூர் தொகுதிகளில் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரை விமர்சித்தார். பாகுபலி படத்தின் பல்லாளத் தேவாவைப் போல் வில்லன் என தன்னை விமர்சித்த மோடிக்கு அவர் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், `பொய் சொல்வதற்காகவே பிரதமர் மோடி இருக்கிறார். ஒரு உண்மை கூட அவர் வாயில் இருந்து வந்தால் தலை 100 துண்டுகளாக சுக்குநூறாக உடைந்துவிடும் சாபம் பெற்றவர் மோடி. ஆந்திர மாநில அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகளைப் பார்த்து மோடி பொறாமை கொண்டிருக்கிறார். ஆந்திர மக்களுக்கு அளித்த உறுதிமொழிப்படி நடக்காமல் அவர் மக்களை ஏமாற்றிவிட்டார். நான் ஆந்திராவின் பாகுபலி. 
 
பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோர் மக்கள் விரோதப் போக்கைக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் (வாக்காளர்கள்) நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றார்.