புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (10:19 IST)

ஊரடங்கில் ஊர் சுற்றிய மந்திரி மகன்! – தட்டிக்கேட்ட பெண் போலீஸ் இடமாற்றம்!

குஜராத் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய அமைச்சர் மகனை தடுத்து நிறுத்திய பெண் போலீஸ் இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநில சுகாதார துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி. குஜராத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சூரத் பகுதியில் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார் பெண் காவலர் ஒருவர். அப்போது அந்த வழியாக பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சிலர் வாகனத்தில் சுற்றி கொண்டிருந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார் பெண் போலீஸ். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட பிரகாஷ் கனானிக்கு போன் செய்துள்ளனர் அவரது நண்பர்கள்.

இதனால் சம்பவ இடத்திற்கே நேரில் வந்து பெண் காவலரிடம் வாக்குவாதம் செய்துள்ளார் பிரகாஷ் கனானி. ஆனால் அமைச்சர் மகனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தடுப்பேன் என பெண் போலீஸ் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பெண் போலீஸுக்கு ஆதரவாகவும், மந்திரி மகனுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் குரல்கள் உயர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு பிறகு தற்கால விடுப்பில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.