கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் மிகவும் அதிகமாக பாய்வதால், பல்வேறு பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பிகாரின் பல மாவட்டங்களில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து, பாகல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் கிழக்கு மத்திய ரயில்வே அறிவிப்பில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் , சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ:
சுல்தான் கஞ்ச் மற்றும் ரத்தன்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள பாலத்தை வெள்ளம் மூடிவிட்டதால், அப்பகுதியில் இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜமால்பூர் - பாகல்பூர் இடையே சென்று கொண்டிருந்த ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: பாட்னா-தும்கா எக்ஸ்பிரஸ், சராய்கர் - தியோகர் ஸ்பெஷல், ஜமால்பூர்-கியுல் மெமு ஸ்பெஷல், பாகல்பூர்-தானாபூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருப்பி விடப்பட்ட ரயில்கள்: அஜ்மீர்-பாகல்பூர் எக்ஸ்பிரஸ், விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ், ஹெளரா-கயா எக்ஸ்பிரஸ், சூரத்-பாகல்பூர் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விஹார்-மால்டா டவுன் எக்ஸ்பிரஸ், பிரம்மபுத்ரா மெயில் போன்ற ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் வெள்ளப்பெருக்கினால் தொடர்ந்தும் பல்வேறு சேதங்கள் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.
Edited by Siva