திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (14:28 IST)

சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்துவிடாதீர்கள் - நரேந்திர மோடி

‘முதன் முதலாக தேர்தலை சந்திக்கும் தெலங்கானா மக்கள் ஆட்சியை சோனியா குடும்பத்திடம் கொடுத்துவிடாதீர்கள்’ என்று நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
Narendra Modi
ஆந்திராவில் பாரதீய ஜனதா கட்சியுடன் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு மத்திய அமைச்சர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன்கல்யாண் தொடங்கிய ஜன சேனா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
 
பாஜக மற்றும் தெலுங்குதேச கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று ஆந்திராவில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் ஆந்திராவில் நேற்று நிஜாமாபாத், ஹைதராபாத் மற்றும் பாலமூர் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-
 
ஆந்திராவில் தெலங்கானா மாநிலத்தை கொண்டு வந்தது நாங்கள் தான் என்று சோனியா காந்தி ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் ராஷ்டிரீய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவும் கூறிவருகிறார்கள். அவர்கள் யாரும் தெலங்கானாவை கொண்டு வரவில்லை. தெலங்கானாவை சேர்ந்த 1100 இளைஞர்களின் உயிர்த்தியாகத்தில்தான் தெலங்கானா மாநிலம் உதயமானது. நீங்கள்தான் தெலங்கானாவை கொண்டு வந்தீர்கள்.
 
தெலங்கானா மாநிலம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. ஊழல் ஆட்சி நடத்திய சோனியா குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள். இந்த தேர்தலில் மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று யோசித்து வாக்களிக்கவேண்டும். இந்த தேர்தல் மக்களின் அதிர்ஷ்டரேகையை மாற்றும் தேர்தல். எனவே நன்றாக சிந்தித்து வாக்களியுங்கள்.
 
இந்த பகுதியில் மின் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. புதிய தொழிற்சாலைகள் உருவாகவும் மின் திட்டங்களை உருவாக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். குஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை இங்கு வசிக்கும் சூரத் மக்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். குஜராத்தில் பெற்ற வளர்ச்சியானது நாடு முழுவதும் ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.
 
தெலங்கானா மக்களை எங்களது சொந்த பிள்ளையாக கருதுவோம். மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். தாயும் மகனும் நிலக்கரி பைலை திருடி மக்களை இருட்டில் தள்ளினார்கள்.
 
காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவை அவமானப்படுத்தியது காங்கிரஸ் கட்சி. பிரதமராக இருந்து மரணம் அடைந்த அவரது உடலுக்கு டெல்லியில் எந்த மரியாதையும் அளிக்காமல் அவரது உடலை உடனடியாக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்து அவமானப்படுத்தியது. அதேபோன்று ஆந்திராவில் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த அஞ்சையாவை ஹைதராபாத் விமான நிலையத்தில் ராஜீவ்காந்தி அவமானப்படுத்தினார்.
 
காங்கிரஸ் கட்சியில் அன்பு இல்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களை மதிப்பது இல்லை. அவர்கள் ஊழலில்தான் கவனம் செலுத்துவார்கள். இவ்வாறு மோடி கூறினார்.