வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (12:59 IST)

ஒய்எஸ்ஆர் கட்டிடம் இடிப்பு..! பழிவாங்கும் அரசியல்..! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன்மோகன் பாய்ச்சல்..!!

YSR Building
ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் இடித்து தள்ளப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சீதா நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது. கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடிக்கப்பட்டு அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.
 
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். 
 
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கட்சி அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனாலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் கட்டிடம் இன்று அதிகாலை இடித்து தகர்க்கப்பட்டது.

பழிவாங்கும் அரசியல்:
Jagan Chandra Babu
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல்  என குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திராவில், சந்திரபாபு அடக்குமுறையை கையிலெடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தப்பள்ளியில் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை சர்வாதிகாரி புல்டோஸர் மூலம் இடித்துள்ளார் என்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

 
சந்திரபாபு நாயுடு, இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார் என்றும் இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது என்றும் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.