ஜோவத் புயல் வலுவிழந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது
ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்குமென்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகருமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வங்கக் கடலில் உருவான ஜோவத் புயல் காலை 5.30 மணி நிலவரப்படி விசாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கில் 230 கி.மீ. தூரத்திலும் ஒதிஷாவின் கோபால்பூருக்குத் தெற்கே 340 கி.மீ. தூரத்திலும் பூரிக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும். இதற்குப் பிறகு ஓதிஷா கடற்கரையை ஒட்டி வடக்கு வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பூரிக்கு அருகில் கரையை நெருங்கும்.
இதன்பிறகு இது மேலும் வலுவிழந்து வடக்கு வடகிழக்கு திசையில் ஒதிஷா கடற்கரையை ஒட்டியே நகர்ந்து மேற்கு வங்கக் கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் ஒன்பது சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.