செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (15:38 IST)

காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது..! பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும்.! பிரதமர் மோடி..

modi
வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜகவின் பேச்சை கேட்க நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டதாக தெரிவித்தார். ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது, இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன் என்று பிரதமர் கூறினார்.
 
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் கூட வெற்றி பெறாது என தெரிவித்த பிரதமர் மோடி, வரும் தேர்தலில் 40 முதல் 50 இடங்களாவது காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்க, நான் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார். பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.
 
காங்கிரஸ் கட்சி தலைவர்களின் எண்ணங்கள் காலாவதி ஆகிவிட்டன என்றும் கடுமையாக சாடினார். காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய ஊழலால் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதாகவும், காங்கிரஸின் கொள்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத போது,   எனது உத்திரவாதம் பற்றி பேச காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
 
அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கவில்லை என்றும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருதை அளித்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 
பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு சட்டங்களை தொடர்ந்து பின்பற்றியது காங்கிரஸ் கட்சிதான் என தெரிவித்த பிரதமர் மோடி,  காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 12 வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும், பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்தார்.