தற்கொலை கடிதத்தில் இருந்த கையெழுத்து காஃபி டே நிறுவனரின் கையெழுத்து இல்லை.. வருமான வரித்துறையினர் விளக்கம்
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, வி.ஜி. சித்தார்த்தா எழுதியதாக வெளியான கடிதத்தில் இருக்கும் கையெழுத்து, அவருடைய கையெழுத்து இல்லை என வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடந்த திங்கட்கிழமை மாயமான நிலையில், அவரது சடலம் நேத்ராவதி ஆற்றில் பல மணி தேடலுக்குப் பின்பு கிடைத்தது. இதனிடையே சித்தார்த்தா எழுதியதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது.
அந்த கடிதத்தில், தனது நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தபோதும் வருமான வரித் துறையினர் தனது சொத்துக்களை முடக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் இல்லை என கூறியுள்ளனர். மேலும் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சித்தார்த்தாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, கணக்கில் வராத பணத்தை தான் வைத்துள்ளதாக அவரே ஒப்புக்கொண்டார் எனவும் கூறினர்.
டைமண்ட் ட்ரீ என்ற நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.3,200 கோடியை சித்தார்த்தா பெற்றார். அதற்கு ரூ.300 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் அவர் ரூ.46 கோடி மட்டுமே வரியாக செலுத்தியுள்ளார் என வரிமான வரித்துறையினர் அந்த பேட்டியில் கூறினர்.
மேலும், அந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. கடிதத்தில் இருந்த சித்தார்த்தாவின் கையெழுத்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியபோது பெற்ற கையெழுத்தோடு ஒத்துப்போகவில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.