திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (11:38 IST)

வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய முடியவில்லை : கை விரித்த மத்திய அரசு

காவிரி நீர் தொடர்பாக வரைவு திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் அதை தாக்கல் செய்யமுடியவில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
 
இந்த வழக்கானது கடந்த 9 ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வரைவு திட்டம் தாக்கல் செய்ய, இன்னும் 2 வார கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
 
இந்நிலையில்,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு காவிரி வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. அதற்கு கர்நாடக தேர்தலை மத்திய அரசு காரணம் காட்டியுள்ளது. அதாவது, காவிரி வரைவு திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால்,  பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை. எனவே, அதற்கான ஒப்புதலை பெற முடியவில்லை என மத்திய அரசு காரணம் கூறியுள்ளது.
 
இதை உச்ச நீதிமன்றம் ஏற்குமா? இல்லை நிராகரிக்குமா? என்பது இன்னும் சிறிய நேரத்தில் தெரிந்துவிடும்.