வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (11:29 IST)

உணவு டெலிவரிக்கு ப்ளிப்கார்ட்டுக்கு தடை! – மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் உணவு டெலிவரியில் ஈடுபட ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், ஆன்லைன் நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் தொழில்களை மீட்டெடுப்பதில் நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் உணவு டெலிவரி சேவையிலும் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு முதலாகவே அமேசான் நிறுவனமும் உணவு பொருள் டெலிவரியில் இறங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ப்ளிப்கார்ட் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட மத்திய அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் அவசிய, ஆடம்பர பொருட்கள் விற்பதற்காக அனுமதி பெற்றுள்ளது என்றும், அதற்கான முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள அமைச்சகம், உணவு பொருட்களை விற்பதற்காக தனி அனுமதி பெற வேண்டும் எனவும், அதுவரையிலும் ப்ளிப்கார்ட் நிறுவனம் உணவுகளை விற்க, டெலிவரி செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் ப்ளிப்கார்ட் மூலமாக விற்கப்படும் உணவு தயாரிக்க பயன்படும் ஆயில், மளிகை பொருட்கள் போன்றவற்றிற்கு தடை இல்லை என்றும் சமைத்த உணவுகளை டெலிவரி செய்ய அனுமதியில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.