வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன மெஷின்! – மத்திய அரசு நடவடிக்கை!
வட இந்திய பகுதிகளில் படையெடுத்திருக்கும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன இயந்திரங்கள் வாங்குவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வழியாக பயணித்து இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருகின்றன. வட இந்திய பகுதிகளான மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பல வேளாண் நிலங்களை அழித்துவிட்டதால் விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன எந்திரங்களை வாங்குவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் 60 நவீன எந்திரங்களும், சிறப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்ட 5 ஹெலிகாப்டர்கள் இங்கிலாந்திடம் ஆர்டர் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றில் பாதி ஜூன் முதல் வாரத்தில் இந்தியா வந்தடையும் என கூறியுள்ளார்.