கொரோனா நிவாரணம்: பெண்கள் வங்கி கணக்கில் ரூ.500 செலுத்திய மத்திய அரசு!
கொரோனா நிவாரணமாக ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மத்திய அரசு ரூ.500 செலுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவது 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில் செய்பவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பலரும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் மக்களுக்கு உதவும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.
அதில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்கிய பெண்களின் கணக்குகளில் மாதம்தோறும் ரூ.500 என்ற ரீதியில் 3 மாதங்களுக்கு பணம் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஏப்ரல் முதல் வார இறுதிக்குள் 20 கோடியே 39 லட்சம் ஜன்தன் யோஜனா கணக்குகளில் ரூ.500 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதற்கட்டமாக நேற்று ஒருநாளில் மட்டும் 4 கோடியே 7 லட்சம் வங்கி கணக்குகளில் நிவாரண தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.