வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (13:12 IST)

தமிழகத்திற்கு நீர் திறப்பு ; தொடரும் போராட்டங்கள் : கர்நாடகாவில் பதட்டம்

தமிழகத்திற்கு நீர் திறப்பு ; தொடரும் போராட்டங்கள் : கர்நாடகாவில் பதட்டம்

தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.


 

 
தமிழகத்திற்கு தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம், பத்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கர்நாடகாவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
அங்குள்ள பாஜக, மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தி மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
 
அதேபோல், சில அமைப்பினர் நேற்று கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட முயன்றனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
 
அதேபோல், கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினர். இறுதியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என்று வலியுறுத்தி வருகிற 9ஆம் தேதி மாண்டியா மாவட்டம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
 
அந்நிலையில், அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நேற்று உத்தரவிட்டார்.
 
இதனால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 10,000 கன அடியும், கபினி அணையில் இருந்து 5000 கன அடி நீரும் நேற்று நள்ளிரவு கார்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டது.


 

 
இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சித்தராமய்யா ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர். இதனையடுத்து அவர்களில் 200 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும், தமிழகத்திற்கு கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தின் பதிவு எண் கொண்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
 
கபினி, கிருஷ்ணராஜ்சாகர் அணைப்பகுதிகளில் பிரமாண்ட பேரணிக்கு கன்னட அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. எனவே அங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளதால், கர்நாடக எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது.