எனக்கு வாக்களித்தால் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்: தேர்தல் வாக்குறுதி..!
எனக்கு வாக்களித்தால் மக்களுக்கு பல்வேறு பயன்களை செய்வேன் என்று பொதுவாக தேர்தல் வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிரா மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், "எனக்கு வாக்களித்தால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு எனது செலவில் திருமணம் செய்து வைப்பேன்" என்று வாக்குறுதி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பார்லி என்ற தொகுதியில் போட்டியிடும் ராஜே சாகேப் தேஷ்முக் என்பவர் புதுவிதமான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
கிராமப்புறங்களில் திருமண வயது கொண்ட ஆண்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையை முன்வைத்து அவர் பேசியுள்ளார். "நான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு எனது செலவில் திருமணம் செய்து வைப்பேன். அது மட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பேன்" என அவர் கூறியுள்ளார்.
"திருமணம் செய்ய விரும்பும் ஆணுக்கு வேலை உள்ளதா, சம்பாத்தியம் உள்ளதா என்று மணமகள் வீட்டார் கேட்கின்றனர். எனவே, முதலில் அந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, அதன் பின் அவர்களுக்கு எனது செலவிலேயே திருமணம் செய்து வைப்பேன்" என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த வாக்குறுதி அந்த தொகுதி மக்கள், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.