பட்ஜெட் நிதியைவிட பாகுபலி வசூல் அதிகம்: மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்த வருட பட்ஜெட் தாக்கலில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், காங்கிரஸ், ஜனசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதோடு, பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ள ஆளும் கட்சியான தெலுங்கு தேசமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அப்போது, தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜெயதேவ் கல்லா பின்வருமாறு பேசினார்.
இந்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு மத்திய அரசு ரூ.1800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது பாகுபலி படத்தின் ஒட்டுமொத்த வசூலைவிட குறைவானது. ஒரு படத்தயாரிப்புக்கான பட்ஜெட்டைவிட ஆந்திராவுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. கூட்டணி கட்சிகளை இப்படி நடத்தினால் எதிர்காலத்தில் கூட்டணியின் நிலை என்னவாகும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பாஜக-வுடன் கூட்டணி தொடரும் என ஏற்கனவே அற்வித்திருந்தார். ஆனால், மக்களின் நலனுக்காக கூட்டணியை உடைக்கவும் தயார் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.