வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (14:52 IST)

”என் மகள் அப்படி முழக்கமிட்டது தவறுதான்”.. ”பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என முழங்கிய மாணவியின் தந்தை வருத்தம்

ஓவைசி கலந்துக்கொண்ட மேடையில் ஒரு மாணவி, “பாகிஸ்தான் வாழ்க” என முழங்கியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட நிலையில், “என் மகள் அவ்வாறு முழங்கியது தவறு தான்” என அம்மாணவியின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று சிஏஏவுக்கு எதிராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உட்பட் சில அமைப்புகள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போராட்டத்திற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாசுதின் ஓவைசி கலந்துக்கொண்டார்.

அதில் போராட்டத்திற்கு வந்திருந்த ஒரு மாணவியை மேடையில் அழைத்து சிஏஏவுக்கு எதிராக பேசச் சொன்னார்கள். இதனை தொடர்ந்து மேடைக்கு ஏறிய கல்லூரி மாணவி ஒருவர் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க) என கோஷமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓவைசி உள்ளிட்டோர் மாணவியின் மைக்கை பிடுங்க முயன்றனர். அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார். ஆனால் அதன் பின் இந்தியாவிற்கு ஆதரவாக கோஷமிட்டார். எனினும் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டதால் போலீஸார் அவரை அழைத்து சென்றனர்.

பின்பு ஓவைசி, அங்கிருந்தவர்களிடம் மைக்கில், “சிஏஏவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சிலர் திசை திருப்ப முயல்கின்றனர். நாம் இந்தியர்கள், நாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுவது தவறானது” என தெளிவு படுத்தினார்.

பாகிஸ்தானிற்கு ஆதரவாக முழங்கிய மாணவர்  மீது போலீஸாரால் தேச துரோக வழக்கு போடப்பட்டது. அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு, வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் அம்மாணவியின் தந்தை செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ”என் மகள் அவ்வாறு முழங்கியது தவறுதான், சில முஸ்லீம்களுடன் இணைந்து அவ்வாறு செய்கிறார்” என கூறியுள்ளார்.