சபரிமலை விவகாரம் – ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலின் உள்ளே அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 28 அன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு ‘பெண்களுக்கு நீண்டகாலமாகவே பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது. பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள்தான். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல. எனவே, அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு பலதரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் வந்துகொண்டிக்கின்றன. சபரிமலை தேவஸ்தானம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ’தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என சபரிமலை கோவில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவேண்டும் என்ற நிலையில் தேசிய ஐய்யப்ப பக்தர்கள் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.