புதிய தேசிய கட்சி: நாடு முழுவதும் போட்டியிட அன்னா ஹசாரே திட்டம்?
சமூக போராளியான அன்னா ஹசாரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழிநடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தின் பயனாகத்தான் டெல்லி முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த நிலையில் மீண்டும் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராடத்தை துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த முறையும் அவர் மத்திய அரசை எதிர்த்து போராடவுள்ளார்.
நேற்று கர்நாடக மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வலுவான லோக்பால் சட்டம் ஒன்றுதான் ஊழலை ஒழிக்க உதவும் என்றும், இந்த சட்டம் குறித்த நடவடிக்கையை பிரதமர் மோடியே முன்னின்று எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
ஊழலையும், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளையும் முடிவுக்குக் கொண்டுவர தேசிய அளவிலான இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க மக்கள் தன்னிடம் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும், இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே வரும் பொதுத்தேர்தலில் அன்னா ஹசாரேவின் இயக்கமும் நாடு முழுவதும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது